• A
  • A
  • A
ரீல் சர்காரை பார்த்து நிஜ சர்க்கார் பயப்படுவது ஏன்...?

'தளபதி' விஜய் நடித்து, முருகதாஸின் 'கதை' உருவாக்கத்தில் தீபாவளியன்று வெளியான படம் சர்கார்.தமிழக அமைச்சர் பெருமக்கள் அனைவரும் சர்கார் படம் தொடர்பாக ஒவ்வொருவராக கருத்து தெரிவித்து வருகிறார்கள். தூத்துக்குடியில் கடம்பூரார் பற்ற வைத்த நெருப்பை சென்னையில் சட்ட அமைச்சர் நிறைவு செய்து வைத்துள்ளார். படத்தில் தேச விரோத கருத்துகள் இருப்பதால் படத்தை தடை செய்ய வேண்டும் என்று ஒருவரும், அம்மா இருக்கும் போது நீங்கள் இப்படி படம் எடுப்பீர்களா என்று ஒரு அமைச்சரும் 'அறிவுபூர்வமாக' கேள்வி எழுப்பியுள்ளனர்.

அமைச்சர் பெருமக்களிடம் இயல்பாகவே கேட்க தோன்றும் ஒரு கேள்வி, நீங்கள் எல்லாம் எப்பொழுதுமே இப்படிதானா என்பது தான்! அம்மா இருந்திருந்தால் உங்களால் முடியுமா என்றால், நீங்கள் எல்லாம் 'டம்மி' என்று ஒத்துக்கொண்டதாக ஆகிவிடாதா அமைச்சர் பெருமக்களே!

உச்சகட்டமாக சர்கார் படம் தொடர்பாக சட்ட அமைச்சர், அரசின் தலைமை வழக்கறிஞருடன் ஆலோசனை மேற்கொண்டதாக தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானது. நல்லது, அப்படியே நீதிமன்றம் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய எஸ்.வி சேகரை கைது செய்ய சொன்ன போது, சட்ட அமைச்சர் எத்தனை தடவை இத்தகைய ஆலோசனையை மேற்கொண்டார் என்பதை விளக்கினால், தமிழ மக்கள் தங்களின் ஆட்சியின் நேர்மையை தெரிந்து கொள்ள வசதியாக இருந்திருக்கும்.

அமைச்சர் பெருமக்களையும் தாண்டி சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானவர்கள் சர்கார் படம் ஓடும் தியேட்டர்களின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதையும், விஜயின் பேனர்களை கிழித்ததையும் நாள் முழுவதும் சில தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு செய்தன. குறிப்பாக படத்தை தயாரித்த நிறுவனத்துக்கு சொந்தமான தொலைக்காட்சி, நிமிடத்துக்கு நிமிடம் விஜய் பேனர் கிழிப்பு, ஆளும் கட்சியினர் அராஜகம் என்று செய்தி வெளியிட்டது. இதையெல்லாம் அவர்கள் வருத்தத்தில் செய்யவில்லை.

வந்த வாய்ப்பை நைசாக பிடித்துக்கொண்டு தங்களின் படத்தை இலவசமாக விளம்பர படுத்திக்கொண்டனர். இந்த அரசியலையாவது மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் புரிந்து கொண்டிருப்பார்களா என்றால், சோப்பு போட்டு குளிப்பதனால் தான் நொய்யல் ஆற்றில் நுரை வருகிறது என்று கூறிய அவர்களால், இதனை உணர்ந்து கொள்வது என்பது சற்று கடினமாகத்தான் இருக்கும்.

உங்களின் ஆட்சி ஒரு மூன்று மணி நேர படத்தை பார்த்து பயப்படும் நிலையில் இருக்கிறது என்றால், இது ஆட்சியா அல்லது வேறு எதாவதா என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களே!

CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்