'ஸ்மித் இல்லாததால் தான் கோலி பெஸ்ட்' - பாண்டிங் காட்டம்
சிட்னி: தடைவிதிக்கப்பட்ட ஆஸி., வீரர் ஸ்டீவ் ஸ்மித் இல்லாததால் தான் கிரிக்கெட்டில் பெஸ்ட் பேட்ஸ்மேனாக கோலி உள்ளார் என்று முன்னாள் ஆஸி., கேப்டன் பாண்டிங் காட்டமாக பேசியுள்ளார்.
நன்றி: @BCCI டுவிட்டர் பக்கம்
இதுதொடர்பாக, சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியதாவது,
"இப்போதைக்கு கோலி தான் பெஸ்ட் பேட்ஸ்மென். ஏனென்றால் ஸ்மித் இப்போது ஆடவில்லை. அவர் விளையாடியிருந்தால் நம்பர் ஒன் இடத்தில் ஸ்மித் தான் இருந்திருப்பார்.
அத்தகைய மதிப்பை ஸ்மித் மேல் வைத்துள்ளேன். கடந்த மூன்று, நான்கு வருடங்களாக ஆஸி. அணிக்கு அவரது பங்களிப்பு பல வெற்றிகளைத் தந்தது" என்று தெரிவித்தார்.
டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை, பாண்டிங் சொன்னது நிதர்சனம்தான். புள்ளி விவரங்களின்படி பார்த்தால், கோலியை விட ஸ்மித் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார்.
கோலியை விட இரு டெஸ்ட் போட்டிகள் குறைவாக ஆடியும் 23 சதங்கள் அடித்துள்ளார். இவரது டெஸ்ட் ஆவரேஜ் 61.37, கோலி 53.40 ரன்கள் தான்.
வெளிநாட்டு போட்டிகளில் கோலியின் பேட்டிங் சராசரி ஆவரேஜ் 45.39. ஆனால் ஸ்மித் 50.96 ரன்களுடன் இதிலும் முன்னிலை பெற்றுள்ளார்.
சமீபத்தில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஸ்மித் தடைக்காலம் முடிந்து வருவதற்குள் கோலி புள்ளிப்பட்டியலிலும் தரவரிசையிலும் அவரைத் தாண்டி முன்னேறுவார்.
புள்ளிகளின் படி உண்மையையே பாண்டிங் கூறியிருந்தும், அவரது காட்டமான பேச்சு கிரிக்கெட் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.