விஜய் சேதுபதியும் திரிஷாவும் கண்களால் காதலை கடத்தும் ‘96’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.
விஜய் சேதுபதி, த்ரிஷா இருவரும் முதல்முறையாக இணைந்து நடிக்கும் திரைப்படம் '96'. அதனால் இப்படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிக்கும் ‘96’படத்தை, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ படத்தை ஒளிப்பதிவு செய்த சி.பிரேம் குமார் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக், இன்று காலை வெளியான நிலையில், அடுத்ததாக டீசர் இன்று மாலை வெளியாகி உள்ளது. கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசையும், சண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவும் இந்த டீசரின் மிகப்பெரிய பலம் என்று கூறலாம்.
டீசரில், விஜய் சேதுபதி, த்ரிஷா இருவரின் கதாபாத்திரமும் மிகவும் உணர்ச்சிகரமானதாக காட்டப்பட்டுள்ளது. காதலர்கள் பல ஆண்டுகளுக்கு சந்திக்கும்போது நடக்கும் உணர்ச்சிகரமான சம்பவங்களும், காதலை திரும்பி பார்க்கும் விதத்தில் கதை இருக்கும் என டீசர் சொல்கிறது. டீசரில் திரிஷாவும் விஜய் சேதுபதியும் காதலை கண்களால் கடத்தும் விதம் கொள்ளை அழகாக உள்ளது.
திரிஷாவுக்கு மீண்டும் ஒரு விண்ணை தாண்டி வருவாயா ஆக இருக்கும் என்பதை டீசர் காட்டுகிறது. மேலும், விஜய் சேதுபதிக்கு முழு நீள காதல் படமாகவும் இருக்கும் என தெரிகிறது.
மொத்தத்தில், விஜய் சேதுபதியின் இன்னொரு நல்ல படம் வெளியாகப்போகிறது என்று நம்பிக்கையை தருகிறது இந்த டீசர்.